Sunday, December 18, 2011

திருமந்திரம்
சைவத்தில் திருமுறைகள் என்பது பன்னிரண்டாகும் .அவற்றில் முதல் மூன்று திருமுறைகள் திரு ஞானசம்பந்தர் அருளியது.நான்கு, ஐந்து,ஆறு, திருமுறைகள் திருநாவுக்கரசர் அருளிச் செய்தது. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது, எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. ஒன்பதாம் திருமுறை சேந்தனார் மற்றும் சிலரின் பாடல்கள் உள்ளன. பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரமாகும். பதினோராம் திருமுறைநம்பியாண்டார் நம்பிகள் வகுத்தது. அவருடைய நூலும் உண்டு. பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) ஆகும். இதில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தை தரிசனா தொலைக் காட்சியில் தினமும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள் அதன் ஒரு பகுதி இங்கே வழங்கப் படுகிறது. இதன் தொடர்ச்சியை நம்முடைய இணைய தளத்தில் பார்த்து கேட்டு பயன் பெற வேண்டுகிறேன். இங்கே கிளிக் செய்யவும். http://youtu.be/QORYuQm2N8A

Tuesday, November 8, 2011

காசி யாத்திரைபொதுவாக காசி யாத்திரை என்பது திருமணத்திற்கு முன் நடத்தப் படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். ஆனால் இந்த காசி என்பது முறையாக போய் வருவது. முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே அக்னி தீர்த்த கரையில் மண் எடுத்துக் கொண்டு அலஹாபாத் சென்று அங்கே (முதல் முறையாக தம்பதியாக செல்பவர்கள் வேணி தானம் செய்ய வேண்டும்) சங்கல்பம் செய்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வந்த மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜை செய்து அதை திரிவேணி சங்கமத்தில் விட்டு விட்டு அங்கே தான் தூய கங்கை எடுத்துக் கொண்டு (இங்கே கங்கை,யமுனை, சரஸ்வதி(அந்தர்வாகினி) மூன்றும் சேருமிடம் ஆகும்.


காசி நகருக்கு இந்த திரிவேணி சங்கம நீர் தான் வடக்கு நோக்கி பாய்ந்து நம் பாவங்களைப் போக்குகிறது. ஆனால் நாம் கங்கையை தனியாக எடுத்துக் கொண்டு அந்த கங்கை நீரை(சிறிதளவு) காசி (வாரணாசி) சென்று விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அந்த மீதம் இருக்கும் நீரை எடுத்துக்கொண்டு அதை மறுமுறை ராமேஸ்வரம்
ஸ்ரீ ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம்ஸ்ரீ ராமநாத சுவாமிக்கு கங்கை நீர் மட்டும் தான் அபிஷேகம் செய்யப் படும். இந்த காசி யாத்திரை பூர்த்தி ஆகும். இந்த யாத்திரையின் மேலும் சில விபரங்களை கீழே காணலாம்.

அலஹாபாத் நகரில் சிவமடம் உள்ளது. அங்கே ஸ்ரீ நடேச சாஸ்திரிகள் அவர்களின் தலைமுறையினர்கள் திரு.கணேசன்,திரு.சுப்ரமணியம், திரு வெங்கடேஷ் ஆகியோர் சிறந்த முறையில் உதவிகள் செய்து நம் கடமைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் .

அங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாக்ஷி, அன்னப்பூரணி,மற்றும் பைரவரை வழிபட்டுவேறு மாதங்களில் செல்பவர்கள்(தீபாவளி நாட்களில் சென்றால் தங்க அன்னப்பூரணி,தங்க விசாலாக்ஷி ஸ்வர்ணலிங்கேஸ்வரர்(நாட்டுக் கோட்டை செட்டியார் சத்திரம்), அன்னக்கூடு (லட்டு தேர்) இந்த லட்டு தேர்(நகராது) எல்லா ஆலயங்களிலும் எல்லா விதமான உணவு பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டு வைத்திருப்பார்கள் ஆனந்தமாக கண்டு களிக்கலாம். அந்த பிரசாதங்களை பின்னர் பொது மக்களுக்கு வழங்குவார்கள்) நகரில் இருக்கும் இன்னும் சில விசேஷ கோயில்களுக்கு சென்று விட்டு (காசி ராஜா அரண்மனை,பனராஸ் இந்து பல்கலைக் கழகம்,சங்கட விமோசன ஹனுமான்,சோழி அம்மன், வாராஹி அம்மன், துளசி மானச மந்திர்(ராமாயண நிகழ்வுகள்), துர்க்கை அம்மன் கோயில், திலபாண்டேஷ்வர் கோயில்,) நிறைய பொருட்கள் வாங்கலாம். யாத்திரையை பூர்த்தி செய்து அவரவர் இல்லங்களுக்கு சென்று வாங்கி வந்த பொருட்கள் கங்கை நீர்,போன்ற வற்றை வீட்டில் வைத்து பூஜை செய்து உறவினர்களைக் கூப்பிட்டு அன்னதானம் செய்து எல்லாவிதமான நண்மைகளையும் அடையலாம்.

இந்த யாத்திரைப் பற்றி சந்தேகம் இருந்தால் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டால் சொல்லக் காத்திருக்கிறேன். உ.வெங்கடேச தீக்ஷிதர் 09894406321

Friday, November 4, 2011

மஹாநவமிநம்முடைய இந்து மதத்தில் எத்தனை விதமான நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை பறந்து விரிந்த இந்த தேசத்தில் நீருக்கு பஞ்ச பூதங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதன்படி கங்கை கங்கோத்ரியில் உற்பத்தியாகி நம்முடைய தேசம் முழுவதும் பரவி மக்களுக்கு பயன்பட்டு கடலில் கலப்பது நாம் அறிந்ததாகும். அப்படி கங்கை ஐப்பசி (துலாம்) மாதம் காவேரியில் கலப்பதற்காக வடக்கிருந்து கிளம்பி சிதம்பரத்திற்கு இன்று மஹாநவமி (கங்கை) நடராஜர் அபிஷேகத்திற்கான பரமானந்த கூபம் என்று அழைக்கப் படுகிற கிணற்றிற்கு வருகிறாள் என்பது ஐதீகம்.அதன்படி இன்று கங்கைக்கு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு பூஜை செய்த புனித நீர் வழங்கப் பட்டது. இங்கிருந்து கிளம்பி கடை முகத்திற்கு மயிலாடுதுறை சென்று அங்கிருந்து கார்த்திகை அமாவாசை அன்று திருவிசலூர் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களின் வீட்டில் இருக்கும் கிணற்றிற்கு செல்வதாக ஐதீகம் அங்கிருந்து மாசி மாதம் கும்பகோணம் மஹா மக குளம் சென்று நம் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம். இந்தியா முழுவதும் இது போன்ற இன்னும் பல விதமான நம்பிக்கைகள் உள்ளது அதில் இது சிறப்பாகும்.

Tuesday, October 11, 2011

சிதம்பரம் மஹா ருத்ரம்சிதம்பரம் மஹா ருத்ரம்
இப்போது எல்லா இடங்களிலும் ஏகாதச ருத்ரம், மஹாருத்ரம், அதி ருத்ரம் என்று பல விதமாக செய்திகள் கேள்விப் படுகிறோம். சிதம்பரத்தில் மஹா ருத்ரம் செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததும், குறைந்த செலவில் (வெளி ஊர்களில்செய்வதாக இருந்தால் வேதப் பிராமணர்களை பல ஊர்களில் இருந்து அழைத்து வந்து அவர்கள் தங்குவதற்கு மற்றும் உணவு ஏற்பாடு என்று ஆகும் செலவுகளை தவிர்த்து) மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகளை சிறப்பாகவும் மன நிறைவோடும் செய்ய முடியும்.


.(தில்லை ஸ்ரீ நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகம் நடைபெறுகிறது. .மூன்று அபிஷேகங்கள் நக்ஷத்திரத்திலும் ,(திருவோணம் (சித்திரை) , உத்திரம் (ஆனி), திருவாதிரை (மார்கழி) , மூன்று அபிஷேகம் திதியிலும் ( வளர்பிறை சதுர்த்தசி ஆவணி ,புரட்டாசி , மாசி ) தினமும் நடைபெறுவது ஆறு கால அபிஷேகம் (மார்கழியிலும், கிரஹணத்தின் போதும் மேலும் ஒரு காலமும், சிவராத்திரியில் மூன்று +ஒன்று (அர்த்தஜாமம்) என்று கூடுதலாகும்.) மனிதர்களுக்கு ஒருநாள் 24 மணிநேரம், தேவர்களுக்கு ஒரு நாள் (365 நாட்கள் ) அதன் படி மனிதர்களுக்காக தினமும் ஆறு காலமும் , தேவர்களுக்காக வருஷத்தில் ஆறு அபிஷேகமும் நடைபெறுகிறது.( அயனங்கள் இரண்டு தட்சிணாயணம் (இரவு வேளை ) (ஆவணி (சாயரக்ஷை ) , புரட்டாசி (இரவு இரண்டாம் காலம்) , மார்கழி (காலசந்தி ) உத்தராயணம் (பகல் வேளை ) (சித்திரை (பகல் இரண்டாம் காலம்) ,ஆனி (உச்சிக்காலம்) ,மாசி (அர்த்தஜாமம்).


மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற நிகழ்வுகளைப் பற்றி விரிவாக காண்போம்.
மஹாருத்ரம், அதிருத்ரம் போன்ற வற்றை செய்வதற்கு ஒரு முறை இருக்கிறது. முதலில் ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் அனுக்ஞை, ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நாந்தி, ரக்ஷாபந்தனம், மதுபர்க்கம், என்று பூர்வாங்கமாக செய்து பிறகு
மஹாருத்ரம் என்றால் 1x11= ஏகாதச ருத்ரம் ,11x11=121 ருத்ராபிஷேகம், 121x11=1331 (மஹாருத்ரம் )1331x11=14641 (அதிருத்ரம்)
என்று ஸ்ரீருத்ர ஜபம் தீக்ஷிதர்களைக்கொண்டு (வஸ்திரம் கொடுத்து ) ஏகாதச ருத்ர பாராயணமும், செய்து நடவானப் பந்தலில் 216 (வெள்ளி ) கலசங்கள் வைத்து ஆவாஹனம் செய்து பிரதானமாக ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்கு இரண்டு தங்க குடங்கள் வைத்து ஆவாஹனம்செய்து
ஸ்ரீ ருத்ரத்ரிசதி அர்ச்சனை செய்து,

மஹாருத்ரம் என்றால் 13 ஆச்சாரியர்களும், அதிருத்ரம் என்றால்
14 ஆச்சாரியர்களும் (சோபனம் கொடுத்து ) ஏகாதசருத்ர ஹோமம் செய்து,வடுக பூஜை,கன்யா பூஜை,சுவாசினி பூஜை, தம்பதி பூஜை,கோ பூஜை,கஜ பூஜை,அஸ்வ பூஜை செய்து ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்திக்குமஹா அபிஷேகம்.

அளவுக்கு அதிகமான (விபூதி,பால்,தயிர்,தேன், நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம், பழச்சாறு, இளநீர், பன்னீர், சந்தானம்,மலர்கள் ) போன்ற திரவியங்களைக் கொண்டு மஹா அபிஷேகம் செய்து பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்து கால பூஜைகள் செய்வது எப்போதும் பழக்கமாகவுள்ளது. இங்கே மஹாருத்ரத்தன்று மதியம் தீக்ஷிதர்கள் ஆயிரம் பேருக்கு போஜனம் செய்வித்து தக்ஷிணை கொடுத்து ஆசி பெறமுடியும். எளிதில் மஹாருத்ரம், அதிருத்ரம் செய்ய தகுதியான இடம் சிதம்பரம் ஆகும்.

Monday, September 19, 2011

ஜெயங்கொண்டப் பட்டினம்

சிதம்பரம் வட்டம் ஜெயங்கொண்டப் பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சௌந்தர்யம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர், செஞ்சி விநாயகர்,மற்றும் ஸ்ரீ எல்லையம்மன் என்கிற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 13.09.2011 முதல் தொடங்கி நான்கு கால பூஜைகள் நடந்தது. வெள்ளி 16-09-2011 காலை கோ பூஜையும் தொடர்ந்து மகாகும்பாபிஷேகமும் ,மஹா அபிஷேகமும் ,அன்னதானமும், இரவு வீதிஉலாவும் நடந்தது.

Friday, September 9, 2011

ஸ்ரீ கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
8-09-2011காலை 8.30 மணியளவில் கோவிலாம்பூண்டி கிராமத்தில் கீழத்தெரு ஸ்ரீ கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிதம்பரம் வெங்கடேச தீக்ஷிதர் நடத்திவைத்தார். கீழத்தெருவில் நூதனமாக கட்டப்பட்ட ஆலயத்தில் சப்த கன்னியம்மன் மற்றும் வீரனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது புதன் கிழமை தொடங்கி யாக பூஜைகள் நடைபெற்றது. அதன் சில படங்கள் இங்கே .

Monday, August 1, 2011

"ஆன்மிக சேவைச் செம்மல்"

Hotel Palmgrove Nungampakkam Chennai (30-07-2011) ஐந்து மணிக்கு நடைபெற்ற விழாவில்சிதம்பரம் உ.வெங்கடேச தீட்சிதருக்கு விருது வழங்கப் படுகிறது. உடன் இருப்போர் (வலமிருந்து) அமரசிகாமணி, A.R.ஸ்ரீனிவாசன் ,V.S.ராகவன் ,L.I.C.நரசிம்மன் ,T.P.கஜேந்திரன்,
லியாகத் அலிகான் ,வையாபுரி,கோபாலன் ஆகியோர். தானத்தில் சிறந்தது அன்னதானம் அதை பதினோரு ஆண்டுகளாக செய்து வரும் ஸ்ரீ உ.வெங்கடேச தீட்சிதருக்கு "ஆன்மிக சேவைச் செம்மல்"
என்கிற விருதினை வழங்கி கௌரவிக்கிறோம். செயலாளர் கோபாலன் தென் இந்திய சமூக கலாச்சார அகாடமி சென்னை.

Friday, July 22, 2011

தச்சங்குளம் கொடியேற்றம்(21-07-2011) கொடியேற்றத்துடன் தொடங்கியது.நீண்ட நெடுங்காலமாக தில்லையில் அருள் பாலித்து வரும் தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மனுக்கு இந்த ஆண்டின் ஆடி மாத மகோற்சவம் இன்று காலை 11 மணியளவில் ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீக்ஷிதர் கொடியேற்றி துவக்கி வைத்தார். இன்று இரவு வீதி உலாவும், அதனை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனையும், ஊஞ்சல் உற்சவமும் ஒன்பதாம் நாள் செடல் உற்சவமும், பத்தாம் நாள் மஞ்சள் விளையாட்டும் கொடியிறக்கமும் நடைபெறும் .இந்த நிகழ்ச்சியின் படங்கள் சில.

Monday, July 18, 2011

சங்கடஹர சதுர்த்தி18-07-2011 இன்று சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருநாரையூரில் நடைபெற்ற அன்னதான படங்கள் சில இங்கே காணலாம். அன்னதானம் செய்வதால் வரும் பலன்கள் பற்றியும் கோயில் ஸ்தல வரலாறு என்று எல்லா செய்திகளுக்கும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் www.annadhaanam.in

Monday, July 4, 2011

தாயுமானவர் விழா
சிதம்பரத்தில் அம்பலத்தாடி மடம் தெரு , நகராட்சி துவக்கப் பள்ளியில் 1.7.2011 வெள்ளி மாலை 5 மணிக்கு யோகாசன ஆலயம் சார்பாக மஹரிஷி தாயுமானவர் விழா நடைபெற்றது.
தலைமை- உ.வெங்கடேசதீக்ஷிதர், வாழ்த்துரை- ஜா. ராகவன்,திரு.ரத்தினமணி அவர்களும், சிறப்புரை - வே.ரமணன் அவர்களும், சிறப்பு விருந்தினர்- விருதுநகர். அதிர்ஷ்டம் அசோகன் அவர்களும் கலந்து கொண்டு தாயுமானவர் அருட்பாடல்கள் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் ஜெயசுகந்திரமேஷ் அவர்களும் மற்றும் யோகாசன ஆலய உறுப்பினர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு திரு.கருணாநிதி அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது .

Sunday, July 3, 2011

இரட்டைப் புலவர்கள்


இளஞ்சூரியர், முதுசூரியர், என்றபுகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள் செய்த தில்லைக் கலம்பகத்தில் தில்லை நடராஜனின் செயல்களை அழகு பட இரட்டை அர்த்தங்கள் உள்ளது போல் அமைந்த ஒரு பாடலையும் அதன் பொருளையும் இங்கே காண்போம்
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்தவர்,
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்திலார்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்தவர்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்திளார் ,
வம்பு லாவும் இதழியை வேட்டவர்,
வந்து செய்ய இதழியை வேட்டிலார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்தினார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்திலார்,
பம்பு வேலை விடமிட (று) ஆக்கினார்,
பாவை யாசை விடமிட (று) ஆக்கிலார்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்தவர்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்திலார்,
செம்பொன் மாளிகை அம்பலக் கூத்தனார்,
தினமும் எங்களை அம்பலத்(து) ஏற்றினார்,
தில்லை யம்பதி வாழ் நடராசனார்,
திருவு ளச்செயல் நன்றா இருந்ததே.
உரை- தில்லையாகிய அழகிய தலத்தில் எழுந்து அருளியுள்ள நடராசனார், அழகிய புலிக்கால் முனிவருக்கு ஒப்பற்ற நடனம் புரிந்து அருளியவர், சந்திரனுக்கு ஒரு நட்டம் உண்டாகாமல் கலைகள் தேய்ந்து போகாமல் வளரச்செயதவர், திருமாலுக்குச் சக்கரமும் சங்கும் அளித்து அருளியவர், எம் மயங்கிய தலைவிக்கு மோதிரமும் சங்கு வளையல்களும் அளித்தாரல்லர், மனம் வீசும் கொன்றை மாலையை விரும்பியவர், இங்கே எழுந்தருளி சிவந்த வாயிதழையுடைய தலைவியை விரும்பினாரல்லர், மான் குட்டியைத் தம் திருக்கரத்தில் பிடித்தவர், மான் போன்ற தலைவியைத் தம் கைப் பிடித்து நடத்தினாரல்லர், அலைவீசும் கடலில் தோன்றிய நஞ்சைத் தம் கழுத்தில் அடக்கியவர், பெண்ணின் ஆசையாகிய விடத்தை இடறும்படி (நீக்கும்படி)ச் செய்தாரல்லர், சுந்தரரின் மனைவியாகிய பரவை நாச்சியாரின் கோபத்தையும் தளர்ச்சியையும் தீர்த்தருளியவர், கடலால் தலைவிக்கு உண்டான உடல் எரிச்சலையும் தளர்ச்சியையும் நீக்கினாரல்லர், செம்பொன் மாளிகையாகிய பொன்னம்பலத்தில் திருக்கூத்து செய்தருள்பவர், நாள்தோறும் எங்களை ஊரவர் கூறும் பழிச்சொற்களுக்கு, ஆளாக்கினார், தில்லை கூத்தரின் திருவுளச்செயல் நன்றாயிருந்தது.
குறிப்புரை- மடக்கு -வந்தசொல்லோ சொர்க்கலோ, மடங்கி வருவது. நட்டம் -1 .நடனம், 2 .நட்டம், ஆழி- 1 .சக்கரம், 2 .மோதிரம், சங்கு- 1 .சங்கு,2 .சங்காலான வளையல் ,மால்-1 .திருமால், 2 .மயங்கிய தலைவி, இதழி- 1 .கொன்றைமாலை, 2 .சிவந்த இதழையுடையதலைவி, மான்-1 .மான், 2 .மான்போன்றதலைவி,
அம்பலம்-1 .சிற்றம்பலம், 2 .ஊரவர் பழிச்சொல்.

Tuesday, June 28, 2011

கொடியேற்றம்


சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் (28-06-2011) இன்று காலை ஏழு மணிக்கு கொடியேற்றம் நடைபற்றது. உமாபதி சிவம் கூற்றின்படி தெற்கு கோபுரத்திலும் கொடிஏற்றப் பட்டது. .அதனை தொடர்ந்து வேதபாராயணமும் ,திருமுறை பாராயணமும் தொடங்கியது .இதனை மாணிக்கவாசகர் இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் இருக்கொடு தோத்திரம் ஓதினர் ஒருபால் அழுகையர் ஒருபால் , தொழுகையர் ஒரு பால் என்று வர்ணித்துதிருவாசகத்தில் பாடி இருக்கிறார்கள் . சரியாக ஏழு மணிக்கு கோடி ஏறியது .அதனை உத்சவ ஆசாரியர் .ஸ்ரீ சிவ.சிதம்பரேஸ்வர தீக்ஷிதர் ஏற்றினார். அடுத்த பத்து நிமிடங்கள் வண்ண வண்ண ஆடைகள் கொடிமரத்துக்கு சாற்றப்பட்டது அதனை தொடர்ந்து அடுக்கு தீபாராதனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது . உலக நன்மைக்காக ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தியிடம் ப்ரார்த்திக்கப் பட்டது.

Tuesday, June 7, 2011

திருத்தலையூர் மகா ருத்ரம்


திருத்தலையூர் மகா ருத்ரம்
63 நாயன்மார்களுள் ஸ்ரீ ருத்ரத்தை ஓதி வீடுபேறு பெற்றவர்
ஸ்ரீ ருத்ரபசுபதிநாயனார் ஆவார்.
இவரை சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத்தொகையில் “முருகனுக்கும், ருத்ர பசுபதிக்கும் அடியேன்” என்றும் நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில்
“அந்தாழ் புனல் தன்னில் அல்லும் பகலும் நின்றாததரத்தால்
உந்தாத அன்போடு ருத்ரம் சொல்லிக் கருத்தமைந்த பைந்தார்
உருத்ர பசுபதி தன்னற்பதி வயற்கே நந்தார் திருத்தலையூர் என்றுரைப்பர் இன் நாநிலத்தே” என்றும்
சேக்கிழார் பெரிய புராணத்தில்
நீடும் அன்பினால் ருத்ரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் “உருத்ர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற (என்றும்)
நான்கு வேதங்களில் மத்திய பாகமாக போற்றப்படும் ஸ்ரீ ருத்ரத்தை
பாவங்கள், வியாதி, மனக்கவலை நீங்க விரும்புபவனும், பொருளை, ஆரோக்யத்தை வேண்டுபவனும் ஜபிக்க வேண்டும் என்றும் இதற்கு ஈடான மந்திரம் இல்லை என்றும்சூதசம்ஹிதையிலும்,
ஸ்ரீருத்ரமே முக்திக்கு வழி என்றும் ஜாபால உபநிஷத்தும், கூறக்கூடிய ஸ்ரீ ருத்ரத்தை உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று நியமத்துடன் ஜபம் செய்து தில்லை நடராஜப் பெருமானின் குஞ்சித பாதத்தை அடைந்தார் .
இவர் அவதரித்த திருத்தலையூரில் கடந்த 3.11.2006 வெள்ளியன்று திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.
திருத்தலையூரில் 10.12.2006 அன்று தில்லை வாழ்அந்தணர்களைக் கொண்டு மகா ருத்ர பாராயணமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது.
இதன் சிறப்பை உணர்ந்த திருமூலர் “வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே” என்று திருமந்திரத்தில் பாடி இருக்கிறார்.
இந்த வைபவத்தை ஸ்ரீ இஷ்ட சித்தி வினாயகர் பக்தர்கள் சென்னை, சூளைமேடு பகுதியில் இருந்து வந்து சிறப்புற நடத்தினார்கள்.
இந்த திருத்தலையூரில் ஸ்ரீ பார்வதி சமேத பரமமேஸ்வரர் ஆலயமும், உருத்ர பசுபதி நாயனார் கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்த திருக்குளமும் இன்றும் காண முடிகிறது.
அவசியம் ஒரு முறை சென்று அருள் பெற்று வாருங்கள்.
குறிப்பு. தலையூர் ,கும்பகோணம் to காரைக்கால் பேருந்து சாலையில் கொல்லுமாங்குடியில் இருந்து கிழக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் பாவட்டக்குடி (மதகடி) பேருந்து நிறுத்தம்

Wednesday, May 25, 2011

இலங்கையில் ஹோமம்

இலங்கையில் அமைதி வேண்டி மஹா மிருத்யுஞ்சய ஹோமம்
3-11-2006 ல் நடைபெற்றது.

ஸ்ரீ முத்து கிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் சார்பில் பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற மிருத்யுஞ்சய ஹோமம் ஸ்ரீ முத்து கிருஷ்ண ஸ்வாமியின் ஆணையின் வண்ணம் ஹார்ட்டன் பிளேஸ் என்ற நகரில் டாக்டர் திரு . ரகுநாத் இல்லத்தில் நடைபெற்றது.இலங்கை தமிழ் மக்களின் குல தெய்வமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் அருளால் 3-11-2006 ல் பூர்த்தி நாளன்று பிரதோஷம் தில்லைவாழந்தனர்களைக் கொண்டு ஸ்ரீ கணபதி ,ஸ்ரீ நவக்ரகம், ஸ்ரீ சுதர்சனம்,ஸ்ரீ மகாலக்ஷ்மி, ஸ்ரீ ஆயுஷ்யம் , மற்றும் மஹா மிருத்யுஞ்சய ஹோமம் பூர்த்தி செய்யப்பட்டது . 4-11-2006 காலை கொழும்புவில் இருந்து “மீருகம” என்ற இடத்திற்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறிய பேருந்தில் “ தில்லைவாழ் அந்தணர்களை” அழைத்துச் சென்று பூமி பூஜை செய்து பூஜை அறையில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பான விருந்தளித்து மாலையில் தில்லை அம்பலவாணருக்கு லக்ஷார்ச்சனை செய்து, விளக்கு பூஜையும் செய்து விழா இனிதே நிறைவேறியது.

இந்த நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்வாமினி வித்தக விநாயக வடிவு {வித்தம்மா}அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றது.

Saturday, May 21, 2011

திருக்கல்யாணம்சைவ சமயத்தில் நால்வர் என்று அழைக்கப்படுகிற நால்வரில் ஒருவரும் ஆளுடைப் பிள்ளை என்று இயற்பெயரும் கொண்ட ஞான சம்பந்தர் ஆறாம் நூற்றாண்டில் வைகாசி மூலத்தன்று ஆச்சாள்புர (நல்லூர் )த்தில் திருமண நாளன்று சிவனடியார்களோடு இறைவனோடு ஐக்கியம் ஆனார்.

சீர்காழி மாநகரில் பிறந்த ஞான சம்பந்தர் அன்னையின் திரு முலைப்பால் உண்டு ஞானம் பெற்றார். பல அற்புதங்களை செய்தார். சிவாலயங்கள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். உடன் திரு நீல கண்ட யாழ்ப்பாணர் இவருடன் மதங்க சூளாமணியார் இசை வழிபாடு செய்தார். அறுபத்து மூவரில் இருவர் 1. திருநீலநக்கர் ,2 . முருக நாயனார், என்று ஏராளமான சிவனடியார்களுடன்ஐக்கியம் ஆனார்கள் .

19.05.2011 காலை உபநயனம் செய்வித்து இரவு மாலைமாற்றல் , வைதீக முறைப்படி ஸ்தோத்ர பூர்ணாம்பிகை யுடன் திரு ஞான சம்பந்தர் திருமணம் நடைபெற்றது. அதற்கு சிதம்பரத்தில் இருந்து திருமண விருதுகள் மாலை களுடன் கொண்டு சென்று சாற்றப் பட்டது.

அக்ஷய த்ரிதியை6.5.2011சிதம்பரம்
ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் அக்ஷய த்ரிதியையை முன்னிட்டு காலையில் அன்னதானமும் மாலை அம்பாள் சன்னதியில் வடுக பூஜை, கன்னியா பூஜை ,சுவாசினி பூஜை ,108 தம்பதி பூஜையும் நடைபெற்றது. அதன் சில காட்சிகள் .