Friday, July 22, 2011

தச்சங்குளம் கொடியேற்றம்(21-07-2011) கொடியேற்றத்துடன் தொடங்கியது.நீண்ட நெடுங்காலமாக தில்லையில் அருள் பாலித்து வரும் தச்சங்குளம் ஸ்ரீ திவ்ய மஹா மாரியம்மனுக்கு இந்த ஆண்டின் ஆடி மாத மகோற்சவம் இன்று காலை 11 மணியளவில் ஆச்சாரியார் பிரம்மஸ்ரீ உ.வெங்கடேச தீக்ஷிதர் கொடியேற்றி துவக்கி வைத்தார். இன்று இரவு வீதி உலாவும், அதனை தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனையும், ஊஞ்சல் உற்சவமும் ஒன்பதாம் நாள் செடல் உற்சவமும், பத்தாம் நாள் மஞ்சள் விளையாட்டும் கொடியிறக்கமும் நடைபெறும் .இந்த நிகழ்ச்சியின் படங்கள் சில.

Monday, July 18, 2011

சங்கடஹர சதுர்த்தி18-07-2011 இன்று சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருநாரையூரில் நடைபெற்ற அன்னதான படங்கள் சில இங்கே காணலாம். அன்னதானம் செய்வதால் வரும் பலன்கள் பற்றியும் கோயில் ஸ்தல வரலாறு என்று எல்லா செய்திகளுக்கும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும் www.annadhaanam.in

Monday, July 4, 2011

தாயுமானவர் விழா
சிதம்பரத்தில் அம்பலத்தாடி மடம் தெரு , நகராட்சி துவக்கப் பள்ளியில் 1.7.2011 வெள்ளி மாலை 5 மணிக்கு யோகாசன ஆலயம் சார்பாக மஹரிஷி தாயுமானவர் விழா நடைபெற்றது.
தலைமை- உ.வெங்கடேசதீக்ஷிதர், வாழ்த்துரை- ஜா. ராகவன்,திரு.ரத்தினமணி அவர்களும், சிறப்புரை - வே.ரமணன் அவர்களும், சிறப்பு விருந்தினர்- விருதுநகர். அதிர்ஷ்டம் அசோகன் அவர்களும் கலந்து கொண்டு தாயுமானவர் அருட்பாடல்கள் மனனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும் ஜெயசுகந்திரமேஷ் அவர்களும் மற்றும் யோகாசன ஆலய உறுப்பினர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு திரு.கருணாநிதி அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது .

Sunday, July 3, 2011

இரட்டைப் புலவர்கள்


இளஞ்சூரியர், முதுசூரியர், என்றபுகழ் பெற்ற இரட்டைப் புலவர்கள் செய்த தில்லைக் கலம்பகத்தில் தில்லை நடராஜனின் செயல்களை அழகு பட இரட்டை அர்த்தங்கள் உள்ளது போல் அமைந்த ஒரு பாடலையும் அதன் பொருளையும் இங்கே காண்போம்
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்தவர்,
அம்பு லிக்கொரு நட்டம் புரிந்திலார்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்தவர்,
ஆழி யும்சங்கும் மாலுக் களித்திளார் ,
வம்பு லாவும் இதழியை வேட்டவர்,
வந்து செய்ய இதழியை வேட்டிலார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்தினார்,
மானை யும்கைப் பிடித்தே நடத்திலார்,
பம்பு வேலை விடமிட (று) ஆக்கினார்,
பாவை யாசை விடமிட (று) ஆக்கிலார்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்தவர்,
பரவை கோபமும் சோபமும் தீர்த்திலார்,
செம்பொன் மாளிகை அம்பலக் கூத்தனார்,
தினமும் எங்களை அம்பலத்(து) ஏற்றினார்,
தில்லை யம்பதி வாழ் நடராசனார்,
திருவு ளச்செயல் நன்றா இருந்ததே.
உரை- தில்லையாகிய அழகிய தலத்தில் எழுந்து அருளியுள்ள நடராசனார், அழகிய புலிக்கால் முனிவருக்கு ஒப்பற்ற நடனம் புரிந்து அருளியவர், சந்திரனுக்கு ஒரு நட்டம் உண்டாகாமல் கலைகள் தேய்ந்து போகாமல் வளரச்செயதவர், திருமாலுக்குச் சக்கரமும் சங்கும் அளித்து அருளியவர், எம் மயங்கிய தலைவிக்கு மோதிரமும் சங்கு வளையல்களும் அளித்தாரல்லர், மனம் வீசும் கொன்றை மாலையை விரும்பியவர், இங்கே எழுந்தருளி சிவந்த வாயிதழையுடைய தலைவியை விரும்பினாரல்லர், மான் குட்டியைத் தம் திருக்கரத்தில் பிடித்தவர், மான் போன்ற தலைவியைத் தம் கைப் பிடித்து நடத்தினாரல்லர், அலைவீசும் கடலில் தோன்றிய நஞ்சைத் தம் கழுத்தில் அடக்கியவர், பெண்ணின் ஆசையாகிய விடத்தை இடறும்படி (நீக்கும்படி)ச் செய்தாரல்லர், சுந்தரரின் மனைவியாகிய பரவை நாச்சியாரின் கோபத்தையும் தளர்ச்சியையும் தீர்த்தருளியவர், கடலால் தலைவிக்கு உண்டான உடல் எரிச்சலையும் தளர்ச்சியையும் நீக்கினாரல்லர், செம்பொன் மாளிகையாகிய பொன்னம்பலத்தில் திருக்கூத்து செய்தருள்பவர், நாள்தோறும் எங்களை ஊரவர் கூறும் பழிச்சொற்களுக்கு, ஆளாக்கினார், தில்லை கூத்தரின் திருவுளச்செயல் நன்றாயிருந்தது.
குறிப்புரை- மடக்கு -வந்தசொல்லோ சொர்க்கலோ, மடங்கி வருவது. நட்டம் -1 .நடனம், 2 .நட்டம், ஆழி- 1 .சக்கரம், 2 .மோதிரம், சங்கு- 1 .சங்கு,2 .சங்காலான வளையல் ,மால்-1 .திருமால், 2 .மயங்கிய தலைவி, இதழி- 1 .கொன்றைமாலை, 2 .சிவந்த இதழையுடையதலைவி, மான்-1 .மான், 2 .மான்போன்றதலைவி,
அம்பலம்-1 .சிற்றம்பலம், 2 .ஊரவர் பழிச்சொல்.