Friday, October 13, 2017

திருமூலருக்கு பூமியில் சமாதி இல்லை.



                                             தில்லையில் திருமூலர்.



               
அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்
                 
முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி
                 
இந்திரன் மால் அயன் முதல்ஆம் இமையவர்க்குநெறி அருளும்
                 
நந்தி திருஅருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.



   
திருக்கைலாயத்தில் நந்தியெம்பெருமானுடைய உபதேசம் பெற்ற சித்தர்கள் பலர் உண்டு. அவர்களுள்  ஒரு  சித்தர்  , பொதிய மலையில் இருந்த   தமிழ்ப் புலவர் அகத்தியரைப் பார்த்துவிட்டுச் சிலகாலம் அவருடன் தங்கலாம் என்ற  எண்ணத்தில் அவர் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டார். அப்படிச் செல்லும்  வழியில் இருந்த திருக்கேதாரத்தை வழிபட்டு , பிறகு நேபாளத்தில் வீற்றிருக்கும் பசுபதியையும் வணங்கி , பின் கங்கைக் கரை வந்துசேர்ந்தார். கங்கையில் நீராடிவிட்டு ,        காசியில் வீற்றிருக்கும் விஸ்வநாதரைத் தரிசித்துக் கொண்டார். அதற்குப் பின் ஸ்ரீசைலம் சென்று இறைவனைப் போற்றிப் பின் , திருக்காளத்தி நோக்கிச் சென்றார் . அங்கு காளத்தியப்பனைத் தரிசனம் செய்துகொண்டு , தென்திசை நோக்கிப் பயணமானார்.

                  
திருவாலங்காடு , காஞ்சீபுரம் ,போன்ற தலங்களையும் கண்டு அங்குள்ள  யோகிகளுடன் கூடி அளவளாவி அவர்களுடன் சிலகாலம் தங்கினார். அப்பால் திருவதிகை என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனை  வழிபட்டுவிட்டுத் தில்லை நோக்கி வந்தார்.. தில்லையை அடைந்தவுடன் , இங்குள்ள கோயிலில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானைத் தொழுது  வணங்கியபோது , இத்தலத்திலேயே
இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அப்படி அவர் நினைத்தாலும் மேலும் தன் பயணத்தைத் தொடர்வதே நல்லது எனத் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அப்படிப் புறப்பட்டுச் செல்கையில் அந்த ஊர் காவிரிக் கரையில் பல பசுக்கள் கூட்டம் கூட்டமாக வெகு தொலைவில்  மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டார்.

                             
அருகில் அந்தணர்கள் வாழ்கின்ற சாத்தனூர் என்னும் ஊரில் வாழ்ந்து கொண்டிருந்த மூலன் என்னும் பெயருடைய ஆயன் , அந்தப் பசுக் கூட்டங்களை அங்கே அழைத்து வந்து மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான் . அன்றும் அவன்  அப்படி மாடுகளை மேய்க்கும் பொழுது ,  அவனுடைய வாழ்நாளுக்கு இறுதி வந்ததால்
திடீரென்று அங்கேயே இறந்து போனான். அவன் உடல் கீழே கிடக்க , ஆவினங்கள் அந்த உடலைச் சுற்றிச் சுற்றி வந்து தம் நாவால் வருடிக் கொண்டும்  , மோர்ந்து பார்த்தும். பின் கண்ணீர் விட்டும் , ஏதோ ஆகிவிட்டது என நினைத்து பெருமூச்சு விட்டன. அந்தக் காட்சியைக் கண்ட சித்தர் மனம் இரங்கினார். இந்தப் பசுக்களின் துன்பம் போக்க ஏதாவது வழி இருக்கிறதா? என ஆராய்ந்தார். மீண்டும் ஆயன் உயிர் பெற்று எழுந்தாலன்றி  இந்தப் பசுக்களின் துன்பம் தீராது என்பதை நன்கு அறிந்தார். தம்முடைய யோக ஆற்றலினல் தம் உடம்பை ஒரு இடத்தில் கிடத்திவிட்டு, இறந்த ஆயன். (அஷ்டமா சித்திகளில் ஒன்றான கூடுவிட்டு கூடு பாயும் முறையில்) உடலுள் புகுந்தார்,
ஆயன் எழுந்தான் .

இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா' என்று
 
அவன் உடலில் தம் உயிரை அடை விக்க அருள் புரியும்
 
தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற
 
பவன வழி அவன் உடலில் தம் உயிரைப் பாய்த்தினார்.



 
தம்மைப் பாதுகாப்பவன் எழுந்தவுடன் ,பசுக்கள் துள்ளிக் குதித்து அவனை நக்கி , மோர்ந்து பார்த்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி பின் முன் போல் மேயச் சென்றன. திருமூலர் அந்தப் பசுக்கள் இருக்கும் இடம் சென்று அவற்றை மேய்த்து விட்டுப் பிறகு தண்ணீர் காட்டிப் பாதுகாத்து ஆயன் செய்வது போல் எல்லா வேலைகளையும் செய்தார். கதிரவன் மறைந்தவுடன்  பசுக்கள் தங்கள் கன்றுகளை நினைத்துச் சாத்தனூரை நோக்கிப் புறப்பட்டன . திருமூலரும் அவற்றின் பின்னே சென்றார். ஒவ்வொரு மாடும் தன் தன் வீடு புக, அவரும் அதன்
பின்னே அது வீட்டைச் சேரும் வரை நின்றார். .
                            ஆயனின் மனைவியோ தன் கணவர் வருவதற்கு நேரமாகிவிட்டதே என்று கலங்கி வாசலில் நின்று காத்துக் கிடந்தாள். திருமூலரைக் கண்டவுடன் அவள் ,” ஏன் இவ்வளவு தாமதம் .
உடம்பிற்கு ஏதேனும் தீங்கு வந்ததோ ? “என்று சொல்லி அவரைத் தொடர்ந்தாள். அவள் அவரை நெருங்கவும் அவளிடமிருந்து அவர் சற்றே விலகினார் . உடனே மனைவியும் ,” என்ன வந்தது , ஏன் இப்படி இருக்கிறீர்கள் ?  “என்றுகேட்டாள்.   இனி எனக்கும் உனக்கும் தொடர்பு ஒன்றும் இல்லை என்று திருமூலர் கூறிவிட்டு அவ்வூரில் உள்ள பொது மடத்திற்குச் சென்று யோகத்தில் அமரத் தொடங்கினார்.

                              
இரவெல்லாம் துயிலாமல். இதே நினைப்புடன் இருந்த மூலனின் மனைவி காலையில் எழுந்தவுடன் திருமூலரின் மாறுபட்ட போக்கை அவ்வூர்க்காரர்களுக்கு விரைவாகத்  தெரியப்படுத்தினாள் . அவர்கள் யாவரும் அந்த மடத்திற்குச் சென்று பார்த்தால் மூலன் யோக நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அதைக்கண்ட மக்கள் மிகவும்  வியப்படைந்தனர். இவருக்குப் பித்துப் பிடிக்கவில்லை, வேறு ஒரு பெண்ணிடத்தில் வைத்த அன்பினாலும் இவளைப் புறக்கணிக்கவில்லை. சித்த விகற்பம் நீங்கித் தெளிந்த சிவயோகத்தில்
இருக்கிறார் . பழையபடி இனி உறவு கொள்ளல் தகாது என்று அந்தப் பெண்ணிடம் கூறி அவளை வீட்டிற்கு அனுப்பினார்கள்.

                
திருமூலர் யோகம் தெளிந்து பசுக்களுடன் திருவாவடுதுறைக்குச்
சென்றார்.. அங்கு மறைத்துவைத்திருந்த உடலைப் பார்த்தபோது அது அங்கு காணவில்லை . திருமூலர் வாயிலாகச் சிவாகமப் பொருள் தமிழில் வெளிவரவேண்டுமென்பது சிவபெருமானின் திருவுள்ளமாதலின் அவ்வுடம்பை மறைத்தருளினான். இதனை ஞானப் பார்வையால் உணர்ந்த திருமூலர், திருவருளின்
வழியே நடக்க எண்ணி , திருவாவடுதுறைக் கோயிலை அடைந்தார். அக்கோயிலில் உள்ள தலவிருட்சமாகிய அரச மரத்தின் அடியில் உட்கார்ந்து சிவயோகம் செய்யத் தொடங்கினார்.

 

                      யோக நிலையில் இருந்த திருமூலர் ஓராண்டு காலம் யோகம் செய்து கண் விழிப்பார் பின்  ஒரு பாடல் பாடுவார் மறுபடியும் யோக நிலைக்குச் சென்றுவிடுவார் மறுபடியும் ஒரு பாடல். இப்படியே ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார்.


                      
தில்லையில் சில காலம் வாழ்ந்த திருமூலர், தில்லையில்
நடம்புரியும் நடனத்தை பல தலைபுகலில் பாடி இருக்கிறார். 1. திருக்கூத்து தரிசனம் 2. சிவானந்தக் கூத்து, 3. சுந்தரக் கூத்து, 4. பொற்பதிக் கூத்து,  5. பொறத்தில்லைக் கூத்து , 6, அற்புதக் கூத்து, என்று அதன் சிறப்புகளை மிகவும் மகிழ்ந்து பாடி இருக்கிறார்.

                 
அறுபத்து மூவரில் ஒருவராக வழிபடப் படுகிறார்.
  
குறிப்பு -;

                 
பொதுவாக ஒரு கேள்வி உண்டு? திருமூலர் சமாதி எங்கு
உள்ளது.? என்று . திருமூலர் சமாதி சிதம்பரத்தில் இருப்பதாக சில நூல்களில் விபரம் தெரியாமல் எழுதி உள்ளனர். பின்னர் நூல்களிலும் அதையே பின்பற்றி எழுதி வருகிறார்கள். அது வருத்தத்திற்குரியது.

                 
திருமூலரை அறிமுகம் செய்தவர் திருத்தொண்டத்தொகை எனும் பாடலில் நம்பிரான் திருமூலர் அடியார்க்கும் அடியேன் என்றும்,
                 நம்பியாண்டார் நம்பிகள் தன்னுடைய பதினோராம் திருமுறையில்,  திருமூலரின் தன்மைகளை விளக்கி நான்கு வரிகளில் பாடியுள்ளார்.    
 குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைப்புக்கு

 
முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்

 
படிமன்னு வேதத்தின் சொற்படியே பர வீட்டென்உச்சி

 
அடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.என்று

விளக்கியுள்ளார்.



                    சேக்கிழார் பன்னிரெண்டாம் திருமுறையில் 37 பாடல்களில் திருமூலர் வாழ்வையும் , வாக்கையும் விளக்கும் போது கீழ்கண்ட இப்படாலைப் பாடியுள்ளார்.

முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி,
மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து,
சென்னி மதி அணிந்தார் தம் திரு அருளால் திருக் கயிலை
தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார்.



அவை திருமந்திர மாலை என்று அரிய நூலாய் விளங்கிற்று. மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து , பிறகு இறைவன் திருவருளால் மீண்டும் திருக்கைலாயம் சென்று எம்பெருமானைப் பிரியாமல் உறையும் பெரு வாழ்வு பெற்றார். எனவே திருமூலருக்கு பூமியில் சமாதி இல்லை என்பது உறுதி செய்யப் படுகிறது.



           
திருமூலர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திரமாலை,
திருமந்திரம் என்றும் வழங்கப் பெறும். அது  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கைப் பற்றியும் கூறும் ஒன்பது தந்திரங்கள் அமைந்தது. சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் இது பத்தாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.




















சிதம்பரம் ஸ்தல புராணம்


பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆதிமூலநாதர் வழிப்பாட்டின் காரணமாக கயிலையில் இருந்து ஸ்ரீ நடராஜர் சிவகாமி முப்பத்தி முக்கோடி தேவர்கள், 3000 தில்லைவாழந்தணர்கள் புடை சூழ தில்லையில் நாளைவரை ஆனந்த நடனம் புரிந்து வருகிறார்.
அதன் படி உமயபார்வதி சமேத ஆதிமூலநாதர்  சிவ லிங்கத்திற்கு தினமும் நான்கு கால பூஜையும்,நான்கு கால பூஜையிலும் அன்னாபிஷேகமும்மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் பன்னிரண்டு அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு
அபிஷேகமும், நடைபெறுகிறது.  இந்த சிவலிங்கத்தை வழிபட்டுத்  தான் சிலகாலம் தில்லையில் வாழ்ந்தார்.

எனவே சிதம்பரத்தில் அருள் புரியும் ஆதிமூலநாதருக்கும், திருமந்திரத்தைஅருளிய திருமூல நாயனார் என்று அழைக்கப்படும்  திருமூலருக்கும் பக்தர் என்ற ஒரு உறவே தவிர திருமூல நாயனாருக்கு பூமியில் சமாதி இல்லை என்பது சந்தேகமின்றி  தெரிய வருகிறது.

திருமூலர் கயிலைக்கு சென்ற தினம் குருபூஜை தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. அறுபத்து மூவர் வழிபாடு செய்யும்அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக தில்லையிலும்,                 63 சாத்தனூரிலும்  ஐப்பசி மாத அஸ்வதி நக்ஷத்திரத்தில் குருபூஜை சிறப்பாக நடைபெறுவது நிகழ்வாகும்.


                               ஸ்ரீ உமயபார்வதி சமேத ஆதிமூலநாதரை  வழிபட்டால்  பகதர்கள் வேண்டும் பலன்களை வாரி வழங்குகிறார். திருமணம் ஆகாத ஆண் ,பெண் இருபாலருக்கும் சகல விதமான திருமண தோஷங்கள் நீங்க 11 திங்கள் கிழமை ஸ்ரீ சுயம்வர கலா பார்வதி
மந்திர ஜபம் ( சிலர் ஹோமமும் செய்வதுண்டு )செய்து சுவாமி அம்பாளுக்கு இரண்டு மாலைகள் சாற்றி அர்ச்சனை, பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டு பிரசாதத்தை தாங்களும் எடுத்துக் கொண்டு, பக்தர்களுக்கும்  கொடுக்கும் பழக்கம் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. வேண்டுதல் மூலமாக திருமணம் செய்து பலன் பெற்றோர் பலருண்டு. அடுத்த தலைமுறை உடையோரும்
அதிகமுண்டு என்றால் அது மிகையில்லை.

               
மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து , பிறகு இறைவன் திருவருளால் திருவாவடுதுறையில் இருந்து மீண்டும் திருக்கைலாயம் சென்று எம்பெருமானைப்பிரியாமல் உறையும் பெரு வாழ்வு பெற்றார்.எனவே  திருமூலருக்கு பூமியில் சமாதி இல்லை என்பது உறுதி செய்யப் படுகிறது.




















ஆக்கம்      உ.வெங்கடேச தீக்ஷிதர் .M.A., சிதம்பரம்

















No comments:

Post a Comment