Thursday, October 12, 2017

ஸ்ரீ நடராஜர் தத்துவம்






                                                              
                                                                                                                                                                              உ                                                                                                                      
                             சிவமயம்
                         திருச்சிற்றம்பலம்
            ஸ்ரீ நடராஜர் தத்துவம்
ஆக்கம் – பால ஜோதிடர் , சித்தாந்த ரத்தினம்
          பிரம்மஸ்ரீ . உ. வெங்கடேச தீக்ஷிதர் ., எம். ஏ.
          செல் – 9894406321    www.anndhaanam.in
          ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 17 ந்தேதி (01-01-2018) தெற்கு வீதி- சபாநாயகர் தெரு திருத்தேர் உத்சவ மண்டகப்படியின்  நினைவாக வெளியிடப்படுகிறது. 
             பெயர், வடிவம், அடையாளம் போன்றவற்றையெல்லாம் கடந்து விளங்கும் சிவம் என்கின்ற பரம்பொருள், உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக, விநாயகனாக, முருகனாக, அம்பாளாக, சிவனாக வடிவம் தாங்கி வருகின்றது என்று அறிவோம். உண்மை, அறிவு, இன்பமாய் விளங்கும் அப்பரம்பொருள் கொள்கின்ற உருவத் திருமேனிகளில் அரிய ஒன்று நடராஜர் என்கின்ற ஆலடரசுத் திருமேனி. சைவர்கள் இல்லத்தில் வைத்து வழிபடுவதற்குச் சிறந்த திருமேனிகளாக நடராஜரையும் சிவலிங்கத்தையும் சாத்திர நூலான திருவருட்பயன் குறிப்பிடும்.
           இதனையே தெய்வச் சேக்கிழாரும் பெரிய புராணத்தில், “கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி, அற்புதக்கோலம் நீடி ……….. திருச்சிற்றம்பலத்துள் நின்று, பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றிஎன்று குறிப்பிடுவார். உயிர்கள் தன்னை வழிபட்டு உய்வதற்காக இறைவனே தாமாகத் தில்லைச் சிற்றபம்பலத்தில் எழுந்தருளினார் என்று தமிழ் வேதமான திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இவ்வரிய நடனத்தைக் காண்பதே உயிர்களின், வாழ்வின் குறிக்கோள் என்று இருக்க, உலகமே வைத்துப் போற்றுதற்குரிய இவ்வரிய வடிவினை வீட்டில் வைத்து வணங்கினால் துன்பங்கள் உண்டாகும் என்று யாரோ ஒரு சிலர் கூறுவதை நம்புவது எவ்வளவு பெரிய அறியாமையாகும் !

              நடராஜர் அல்லது ஆடலரசுத் திருமேனியில் பொதிந்துள்ள ஆழ்ந்த உண்மைகளை ஆராயுமுன், வெளிப்படையான சில செய்திகளை அறிவோம். இவ்வினிய நடராஜர் திருமேனி உருவகமாகப் பல உண்மைகளை உணர்த்தும் அருள்வடிவமாகத் திகழ்கின்றது. இறைவனின் திருமேனி நம் திருமேனியைப் போன்று சதையாலும் குருதியினாலும் நரம்பாலும் ஆகாது, திருவருளையே தம் மேனியாகக் கொண்டு வருகிறது என்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன. அவ்வைகையில் நடராஜர் அல்லது ஆடல்வல்லான் திருமேனியும் அவன் திருமேனியில் தாங்கியுள்ள குறியீடுகளும் உருவகமாகப் பல உண்மைகளை உணர்த்துகின்றன.

              முதலில் இறைவன் திருச்சடை. இது இறைவனின் பிறரால் சொல்லிக் கொடுக்காமலேயே எல்லாவற்றையும் தாமாய் அறிதல், எல்லாம் அறிதல் ஆகிய உயர்ந்த, பரந்த, அறிவினை, ஞானத்தினை உணர்த்துவதாய் உள்ளது.
              கந்தபுராணத்தின்படி, இறைவன் திருச்சடையில் உள்ள கங்கை, பகீரதன் என்ற முனிவன் தன் மூதாதையர்களை வழிபட, பூஞ்சோலை அமைக்க முற்பட்டு, கங்கை நதியைக் கயிலையில் இருந்து பூமிக்கு வரவழைத்தபோது, கங்கை நதி செருக்குற்று, மிகுந்த ஆணவத்துடன் வர,  அதன் வேகம் தாங்காது பூமி அழிந்துவிடுமே என்று இறைவன் அவர்தம் கருணையினால் தம் திருச்சடையில் கங்கையைத் தாங்கி, அது வெளிவரும் திசை தெரியாது செய்து உலகைக் காத்தாராம். இதில் கங்கை நதி பெண்ணாய் உருவகம் செய்யப்பட்டு, அவள் ஆணவத்தை இறைவன் அடக்கி, ஞானம் புகட்டி உயிர்களைக் காத்தார் என்கின்ற அருட்செயலைக் காட்டுவதாய் இறைவன் திருச்சடையில் கங்கை உள்ளது. இதனைச் சிலர் கங்கை சக்களத்தி என்பதும் உண்மைச் சைவத்திற்கு புறம்பானதாகும்.
            
                இறைவன் திருச்சடையில் உள்ள நிலவு இறைவனின் அருட்குணத்தையும் பிழை செய்தவர்களை மன்னிக்கும் உயர்ந்த கருணையையும் குறிக்கிறது. கந்தபுராணக் கூற்றின்படி வானவர்களில் ஒருவனாக சொல்லப்படும் சந்திரன் ஒரு சமயம் 27 பெண்களைப் போன்று சொல்லப்படும் 27 விண்மீன்களை அல்லது நட்சத்திரங்களை மணம் புரிய எண்ணினானாம். விண்மீன்களை இறைவன் ஆணையால் படைத்த பிரமன் அவற்றின் தந்தையைப் போன்று சொல்லப்பட்டு, அப்பிரமனின் அனுமதியைப் பெற சந்திரன் முனைகின்றான். பிரமனும் அவ்விருபத்தேழு விண்மீன்களையும் வேறுபாடின்றி சரிசமமாய் வைத்து அன்பு பாராட்டினால் மணம் புரிந்து கொள்ளலாம் என, கூற அவ்வாறே மணம் புரிந்து கொள்கிறான். பின்பு, சந்திரன் அவன் கொடுத்த வாக்கை மீற, “நாள்பட தேய்ந்து போவாய்!என்று பிரமனின் சினவாக்கினைப் பெற, கருணையே வடினமான சிவப்பரம்பொருளிடம் அடைக்கலம் கோறுகின்றான். தேய்பிறையாக இருந்த சந்திரனின் குற்றத்தைப் பொருத்துத் தன் தலை மேல் வைத்துக் கொண்டாடுகின்ற இறைவனின் பேரருட் குணத்தையே இளம்பிறை உருவமாக உணர்த்தி நிற்கின்றது.
                 நடராஜர் திருமேனியின் திருமுகத்திலுள்ள இடது கண் சந்திரனையும் வலது கண் சூரியனையும் சுட்டும் என்பர். நெற்றிக் கண்ணோ இறைவனின் முற்றறிவையும் இறைவனின் தோடும் குழையும் இறைவன் மாதொரு பாகமாய் அவனும் அவனது திருவருளுமாய் இருப்பதைக் குறியீடாய் உணர்த்துகிறது என்று சான்றோர் கூறுவர்.     இதனையே திருச்சாழலில் மணிவாசகர் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் இறைவன் உமையைத் தமது ஒருபாகத்தில் வைக்காவிட்டால் உலக இயக்கம் நின்றுவிடும் என்பதை,
தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன், பெண்பால் உகந்தான், பெண்பால் உகந்திலனேல் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ,” என்பார்.

              இறைவன் அணிந்திருக்கின்ற திருநீறு நிலையாமையையும், அவன் திருமேனியில் படமெடுத்து ஆடுகின்ற பாம்பு அவனை அறிகின்ற அறிவுக்கு அடையாளமாகவும், அவன் கொவ்வைச் செவ்வாயில் உதிரும் புன்னகை எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கும் அடையாளமாகவும் விளங்குகின்றது. என்பதையும் திருச்சாழலில் மணிவாசகர் நயம்பட எடுத்துரைப்பார். இறைவனின் குனித்த புருவங்கள் குறிப்பால் உயிர்களின் தேவையை எப்பொழுதும் அறிந்து அருளுவதாயும் பவளம் போன்ற ஒளி பொருந்திய மேனி உயிர்களின் அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற அருளொளியையும் உணர்த்துவதாய் உள்ளது என்பார்.

              அருளையே திருமேனியாகக் கொண்டுள்ள நடராஜரின் திருமேனியின் மேலுள்ள ஆடை தோத்திரங்களும்,  சாத்திரங்களும் சிவாகமங்களும் கூறும் உண்மைகள் என்றும் கூறுவர். தவிர இறைவன் அணிந்துள்ள திருமார்பு முப்புரிநூல் இறைவன் கற்றறியாமலேயே தாமாக எல்லாவற்றையும் அறிபவன் என்பதை உணர்த்தும் என்று மணிவாசகர் திருச்சாழலில் சுட்டுவார். ஆடலரசுத் திருமேனியில் இறைவன் அணிந்துள்ள புலித்தோலானது கந்தபுராணத்தில் வரும் தாருகாவனத்து முனிவர்களின் வரலாற்றை நினைவுறுத்தி, இறைவனை மதியாது தவவலிமையினால் உண்டாக்கிய புலியின் தோலை, ஆணவத்தின் வலிமை கெடச் செய்ததின் அடையாளமாய் விளக்கி நிற்கின்றது. இத்தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தின் அடையாளமாய் ஏவப்பட்ட முயலகனைத் திருவடியில் அமிழ்த்தி ஆடுவதே சிறுகுழந்தையைத் திருவடியில் மிதித்திருப்பது போன்று உள்ளது. அறிவுச் செறுக்கினால் ஆணவம் முற்றி இறைவனை மதியாது வாழும் உயிர்களின் அறியாமையை அடக்கி ஆட்கொள்வார்
            என்கின்ற உண்மையை உணராமல் சிலர்,  கருணையே வடிவமான கடவுள் பச்சிளங்குழந்தையையும், காட்டில் வாழும் உயிர் வகையான புலியையும், கருணையின்றிக் கொடுமை செய்கிறது என்று நடராஜர் திருமேனி தோற்றத்தைத் தவறாகக் கூறுவர்.                
             இனி இந்நடராஜர் கோலத்து உண்மைகளைச் சற்று ஆழமாகக் காண்போம்.     சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதிநான்கினுள் ஒன்றான உண்மை விளக்கம்என்ற நூல் இந்நடராஜர் திருமேனி இறைவன் உயிர்களுக்காக இயற்றும் திருக்கூத்தினை உணர்த்துகிறது என்கின்றது. இந்நூலின் ஆசிரியர் மனவாசகங்கடந்தார் என்பார் இறைவனின் திருக்கூத்தானது உயிர்களுக்காக இறைவன் நிகழ்த்தும் ஐந்தொழிலைக் குறிப்பது என்று குறிப்பிடுகிறார். மேலும் இத்திருக்கூத்து ஊனநடனம்,  ஞானநடனம்,  ஆனந்த நடனம் என்ற உயரிய பொருளை உணர்த்துகிறது என்பார்.

          
             சிவம் என்கின்ற பரம்பொருள் உயிர் எனும் ஆதாரத்தில் நின்றுசிவயநமஎன்கின்ற திருவைந்தெழுத்தையே தமது திருமேனி வடிவமாக அமைத்து, உயிர்களின் துன்பத்திற்குக் காரணமான பிறப்பு அறும்படி, தன் திருவடியை ஊன்றி திருநடனம் புரிகின்றார் என்று மனவாசகங்கடந்தார் குறிப்பிடுவார். ஆடலரசுத் திருமேனியைப் பாதத்திலிருந்து தலை வரையும் தலையிலிருந்து பாதம் வரையும் திருவைந்தெழுத்தின் வடிவமாய் கூறுவதைப் பாதாதிகேசம், கேசாதிபாதம் என்று கூறுவர்.   அவ்வகையில் இறைவனின் பாதமிருந்து தொடங்கினால், அன்பர்கள் நாடும் அவன் திருவடி        காரம் என்ற எழுத்தையும், அவன் திருவயிறு காரம் என்ற எழுத்தையும், உயர்ந்த திருத்தோள்கள் சிகாரம் என்ற எழுத்தையும், வேதாகமங்களை அருளிய திருமுகம் காரம் என்ற எழுத்தையும், இறைவனின் படர்ந்த திருச்சடை காரம் என்ற எழுத்தையும், குறிப்பதைக் காட்டும்.        
          திருவைந்தெழுத்தையே திருவுருவமாகக் கொண்டிருப்பதால் நடராஜர் திருமேனி மந்திர வடிவிலான பஞ்சாக்ஷரத் திருமேனி என்பர்.  ஆடல்வல்லான் திருமேனியைத் திருமுடியிலிருந்து திருவடி நோக்காகப் பார்ப்போமாயின் உடுக்கை ஏந்திய வலது திருக்கரம்      சிகாரத்தையும், எடுத்த திருவடியைக் காட்டும் இடது திருக்கரம் அருளைச் சுட்டும் காரமும், அஞ்சேல்என அபயக்குறிகாட்டும் வலது கரத்தில் காரமும், தீ ஏந்திய திருக்கையில் காரமும் முயலகனை அழுத்திப் பொருந்தியிருக்கும் வலது திருக்காலில் காரமும் அமைந்திருக்கிறது. இதனையேஉண்மை விளக்கம் என்கின்ற மெய்கண்ட நூல்,                                                   சேர்க்கும் துடிசிகரம்; சிற்கனவா வீசுகரம்;
                  ஆர்க்கும் யகரம் அபயகரம்:- பார்க்கில் இறைக்(கு)
                  அங்கிநகரம்; அடிக்கீழ் முயலகனார்
                  தங்கும் மகரம்அது தான்.    என்று குறிப்பிடும்.

             ஆடலரசுத் திருமேனி வடிவத்தைச் சுற்றி அமைந்துள்ள திருவாசி ஓம்என்னும் பிரணவத்தை உணர்த்துவதாகும். பிரணவத்தில் பொருந்தி அதை விட்டு நீங்காத திருவைந்தெழுத்தே திருவாசியின் உள்நிறைந்த ஒளியாகும். ஓம்எனும் மந்திரம் நாதம், விந்து, அகரம், உகரம், மகரம் என்று ஐந்து பொருள்களைக் குறிப்பது. நாதம் - அருளலைச் செய்யும் சதாசிவத்தையும், விந்து - மறைத்தலைச் செய்யும் மகேசுவரனையும், அகரம் - படைத்தலை செய்யும் பிரம்மனையும், உகரம் - காத்தலைச் செய்யும் திருமாலையும், மகரம் - அழித்தலைச் செய்யும் உருத்திரனையும் குறிக்கிறது. எனவே, “ஓம்என்ற மந்திரத்தை குறிக்கும் திருவாசி இறைவன் நிகழ்த்தும் ஐந்தொழிலை உணர்த்தி நிற்கின்றது.

              உயிர்களுக்காக நிகழ்த்தும் திருவைந்தெழுத்தின் திருக்கூத்தினை உண்மை விளக்கம்எனும் மெய்கண்ட நூல்      ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என்று விளக்குவதை    இனி காண்போம். நாம் உலக இன்பங்களை நுகர்வதற்கு இறைவன் திருவருள் துணைசெய்வதை ஊன நடனம் என்கிறோம். உயிர்களுக்காக இறைவன் உடல், கருவிகள், உலகங்கள், நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளுதலை ஊன நடனத்தில் இறைவன் ஆற்றும் ஐந்தொழிலாகக் கூறுகின்றோம்.
               படைத்தல் என்பது உடல், கருவிகள், உலகங்கள், நுகர்ச்சிப் பொருள்கள் என்று கூறப்படும்.  இவ்வுலகை மாயையில்       இருந்து தோற்றுவித்து,  உயிர்களின் வினைக்கீடாகப் பொருத்துதல் என்று பொருள்படும். பின்பு காத்தல் என்பதில் அப்படித் தோற்றுவித்த உலகத்தை மீண்டும் ஒடுக்கும்வரை உயிர்களுக்குப் பயன்படுமாறு நிற்கச் செய்தல் ஆகும். அழித்தல் என்பது தோற்றுவிக்கப்பட்டு நின்று செயல்பட்டுக்கொண்டிருக்கும் உலகத்தை மீண்டும் அதன் மூலத்திற்குக் காரண உருவில் சென்று மறையச் செய்தல், மறைத்தல் என்பது உயிர்களைப் பிறப்பு இறப்பு, விழிப்பு உறக்கம், நினைப்பு மறப்பு என்று மாறி-மாறி உலக நுகர்வில் அழுத்தியும் இளைப்பாறவும் செய்தல். அருளல் என்பது பக்குவமடைந்த உயிர்களுக்கு அதன் அறியாமையை நீக்கி, தன்னையும் உயிரையும் உணர்த்தி, உயிரைச் சிவமாம் தன்மை பெறச்செய்து, உயிரை ஆட்கொள்ளுதல் எனும் வீடுபேறு ( முக்தி) அளித்தல் என்பதாகும்.
               இவற்றை நடராஜர் திருமேனி நமக்கு உருவகமாக உணர்த்தி நிற்கின்றது.  நடராஜரின் ஊன நடனத்தில் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தலையும், அமைந்த திருக்கரம் உயிரை மகிழ்விக்கும் காத்தலையும், தீயை ஏந்திய திருக்கரம் அழித்தலையும், அழுத்தமாய் ஊன்றியிருக்கின்ற திருந்திய திருவடி மறைப்பாற்றலையும், நாவரசர் கண்டு மகிழ்ந்த எடுத்தத் திருவடி அருளுதலையும் உணர்த்துகின்றது. இதனை,       தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்,
            சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமா
            ஊன்று மலர்ப்பாதத்தில் உற்றதிரோதம்முத்தி
            நான்ற மலர்ப் பதத்தே நாடு. என்று  மெய்கண்டாரின் மாணவர் மணவாசகங்கடந்தார் குறிப்பிடுவார்.

           ஆடல்வல்லான் திருமேனி உணர்த்தும் ஞான நடனமோ உயிர்கள் திருவடியை அடையும் பொருட்டு இறைவன் நிகழ்த்தும் அருட்கூத்தினை உணர்த்துகிறது. இறைவன் நிகழ்த்தும் ஐந்தொழில் இங்கு வேறுவகையாகக் கூறப்படுகிறது. இங்கு இறைவனின் கையிலிருக்கும் உடுக்கையானது பக்குவம் பெற்ற உயிர்களின் உணர்விலிருந்து மாயையை இறைவன் உதறி விலக்குவதைக் குறிக்கின்றது, தீ ஏந்தி இருத்தலோ பக்குவமடைந்த உயிர்களுக்கு மாயை முளைக்கா வண்ணம் இறைவன் செய்தலைக் குறிக்கின்றது, இறைவனின் ஊன்றிய திருவடியோ மாயையை அதன் வலிமை அல்லது ஆற்றல் கெட்டு இருக்கச் செய்தலைச் சுட்டுகிறது, கூத்தப்பிரானின் தூக்கிய திருவடி உயிர்களை மாயையை  மீண்டும் சாரா வண்ணம் அருளலைக் குறிக்கின்றது, ஆடல் அரசனின்        அபயக்கரம் நில்என்று உயிர்களை ஆனந்தநிலைக்கு அழுத்தும் குறிப்பினையுடையது என்று கூறுவர்.
இதனையே உண்மை விளக்கம் எனும் மெய்கண்ட சாத்திரம்,
           
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
       சாய அமுக்கி, அருள்தான் எடுத்து நேயத்தால்
       ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத்தான் அழுத்தல்
       தான் எந்தையார், பரதம்தான்.   என்று குறிப்பிடும்.

              ஸ்ரீ நடராஜர்  திருமேனி உணர்த்தும் மூன்றாவது திருக்கூத்தானது ஆனந்த நடனம். இந்நடனம் ஆணவம், கன்மம்,  மாயை என்னும் மூன்று மல வாசனைகளை அறவே நீக்கி, யான் எனது என்னும் செருக்கு அற்ற நிலையில், பக்குவமுற்று, மௌனமாகிய அறிவு முதிர்ந்த நிலையிலுள்ள சீவன் முத்தர்களாக்க இறைவன் நிகழ்த்துவதை உணர்த்துவது. இத்தகைய சிறந்த அடியார்கள் தம் உணர்வினால் சிவானந்த அனுபவத்தை அனுபவிக்கும் பொருட்டு இறைவன் தன் திருவருளையே உயிர்களுக்காகத் தமது ஆட்டத்தைத் தரிசிக்கும் சிவகாமி அம்மையாகவும் காட்டி அருள்புரிகிறார். இதனையே உயிர்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் சிவகாமசுந்தரி, தம் நடனத்தை எப்பொழுதும் கண்டு மகிழும் வண்ணம் ஆடுகிறார் என்கிறோம். சிறந்த அடியார்களின் உணர்விலே, அறிவுப் பெருவெளியிலே இறைவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தைக் காட்டுவதாகவே தில்லைச் சிதம்பரத் திருக்கூத்து அமைந்துள்ளது.
சிறந்த அடியார்களின் உள்ளத்தில் விளங்கும் அருள்ஞானம், சிறந்த அடியார்களின் கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்பொறிகளைச் சிவமாம் தன்மை பெறச் செய்து ஆனந்தத் திருக்கூத்தினைத் தரிசிக்கச் செய்யும் என்பதைச் சேக்கிழார் தம் பெரிய புராணத்தில், சுந்தரர் ஆனந்த எல்லையில் கண்டு தரிசித்த தனிப்பெருங்கூத்து என்று குறிப்பிடுவார்.
                இத்தகைய நடனத்தயே தில்லைச் சிதம்பரத்தில் திருநாவுக்கரசு பெருமானும், தம்பிரான் தோழரான சுந்தரரும் பாம்புக்கால் முனிவரான பதஞ்சலியும், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரும் கண்டு சிந்தை மகிழ்ந்தனர். பேயார் என்று அழைக்கப்பெறும் காரைக்கால் அம்மையும் திருவாலங்காட்டில் இத் திருக்கூத்தினையே கண்டு இறைவன் திருவடி நீழலில் அமர்ந்தார்.
             சுருங்கக்கூறின் நடராஜர் திருமேனி உணர்த்தும் ஆனந்தக்கூத்து ஓர் அனுபவக்கூத்து. ஊன நடனமோ உலகில் வாழும் சராசரி மனிதர்க்கு இயற்றப்பெறுவது. ஞான நடனம் முற்றுப்பெற்ற நல்லடியார்க்கு இயற்றப்பெறுவது.  சொற்களாலும் உள்ளத்து உணர்வுகளாலும் அளந்து அறியப்பட முடியாத ஒப்பற்ற அச்சிவப் பரம்பொருளின் இவ்வரிய திருக்கூத்தினை உணர்த்துவதே ஆனித்திருமஞ்சனம் மற்றும் திருவாதிரைப் பெருவிழா. ஸ்ரீ நடராஜப் பெருமானுக்குத் தில்லைச் சிதம்பரத்தில் சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி என்று ஆண்டிற்கு ஆறு முறை நடத்தப்பெறும் நீராட்டு அல்லது திருமஞ்சனம் இதனையே உணர்த்துகின்றது.

             இத்தகைய அரிய உண்மைகளை நமக்கு எடுத்தியம்பும் சிறப்புமிக்க அருள்த் திருமேனியாய் விளங்கும் ஆடல் அரசு அல்லது ஸ்ரீ நடராஜர் திருமேனியின் உண்மையைச் சைவர்கள் அறிந்திருப்பது இன்றியமையாததாகும். ஸ்ரீ நடராஜர் திருமேனியைத் தங்கள் வழிபாட்டிற்குக் கொண்டுவருவது உண்மைச் சைவர்களின்      தலையாய கடமையாகும்.

07-10-2017
சிதம்பரம்

No comments:

Post a Comment