Monday, July 23, 2018

வைகாசி_விசாகம் திருநாரையூர் கோவில் பிரம்மோற்சவம்


வைகாசி_விசாகம் திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவில் பிரம்மோற்சவம் - 24ல் #திருக்கல்யாணம்
#கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள #திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் கோவிலில் 10 நாட்கள் வைகாசி விசாகம் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. மே 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24 ஆம் தேதி#திரிபுரசுந்தரி_சொளந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 27ஆம் தேதி#திருத்தேரோட்டமும்  இனிதே நடந்தேறியது.
திருநாரையூர் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 33-வது தலமாக விளங்குவது திருநாரையூர். இத்தலமானது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள திருநாரையூரில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மனின் பெயர் திரிபுரசுந்தரி மற்றும் மூலவரின் பெயர் சவுந்தரேஸ்வரர் இக்கோவிலின் சிறப்பு அம்சம் இங்கு பொல்லாப்பிள்ளையார் இருப்பதாகும்.
இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும், இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். 'பொள்ளா' என்றால் 'உளியால் செதுக்கப்படாத'என்று அர்த்தம். இத்தல பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தின் இடது பக்கம் பொல்லாப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இது விநாயகரின் முதல்படை படை வீடாகும். அனந்தேசர் என்ற பக்தர் இவருக்கு பூஜை செய்து வந்தார். சுவாமிக்குப் படைக்கும் நைவேத்யத்தை பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வது அவரது வழக்கம். வீட்டிலிருக்கும் அவரது மகன் நம்பியாண்டார் நம்பி அவரிடம் பிரசாதம் கேட்கும்போது, "விநாயகர் சாப்பிட்டுவிட்டார்" என சொல்லிவிடுவார்.
ஒருசமயம், அனந்தேசர் வெளியூர் செல்லவேண்டி இருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார். அவன் விநாயகருக்கு நைவேத்யம் படைத்தான். தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தான். ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால் சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி நைவேத்யத்தை ஏற்றுக்கொள்ளும்படி முறையிட்டான். விநாயகர் அவனுக்கு காட்சி தந்து நைவேத்யத்தை எடுத்துக்கொண்டார். இப்படி தன் மீது நிஜபக்தி செலுத்துவோரின் வேண்டுதல்களை ஏற்று அருள்பவராக இத்தல விநாயகர் விளங்குகிறார்.
மூவர் பாடிய தேவாரப் பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான். அவனுக்குப் பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான். நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக் கூறியது. இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. சோழ மன்னனும் திருமுறைகள் வைக்கப்படிருந்த அறையை திறந்து திருமுறைகளை வெளிக்கொணர்ந்தது வரலாறு.எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் காணப்படும் பிள்ளையார் இங்கே ஒட்டிய வயிற்றுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றுதான். பக்தர்களின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் மிகவும் ஓடியாடி உழைத்ததால் தொப்பை கரைந்து வயிறு ஒட்டி காட்சியளிக்கிறார்
இந்த கோவில் 3 கோபுரங்களை கொண்டது. கோவிலில் நுழைந்தவுடன் நேர் எதிரே சவுந்தரேஸ்வரர் சன்னதியும், இடது புறத்தில் விநாயகரும், நந்தி மண்டபமும் உள்ளன. பொல்லாப்பிள்ளையார் மகா மண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், ராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள்.
இக்கோவிலில் தினசரி ஐந்து கால பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திங்கட்கிழமை வரும் புனர்பூச நட்சத்திரத்தில் நம்பியாண்டார் நம்பிக்கு குரு பூஜை விழாவும் நடைபெறுகிறது. நாரை முக்தி அடைந்த வைகாசி விசாகம் அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
இந்த ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா வரும் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி அங்குராப்பணம் நடைபெறுகிறது. மே 29ஆம் தேதி நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரிபுர சுந்தரி சமோத சவுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி மே 24ஆம் தேதி நடைபெறுகிறது. 27ஆம் தேதி திருத்தேரோட்டம் இனிதே நடந்தேறியது.
#கோவிலுக்கு செல்லும் வழி
சிறப்பு வாய்ந்த இந்த தலம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் அமைந்துள்ளது. இக்கோவில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் இடையே சிதம்பரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காசி சென்று வழிபடுவோரெல்லாம் கண்டிப்பாகத் தொழ வேண்டிய திருக்கோயில் இது. தரிசன நேரம் காலை 06:30 - 11:30 மற்றும் மாலை 04:30 - 07:30

   சுபமஸ்து